Monday, 21 May 2012

என் தேவதைத் தோழி... ஒரு வர்ணனை..




எனக்குச் சரியாக நினைவிருக்கிறது...

அது அதிகாலை 6.00 மணியே தான்.

இளஞ்சூரியன் மெல்லத் தன் கதிர்நீட்ட

துணிகரம் கொண்டிருந்தான்...

வானுயர்ந்த சிகரங்கள்பரிசுத்தமாய் பனியுடுப்பு உடுத்தியிருக்க...

என் பார்வை நீண்ட தூரமெல்லாம்

பச்சைப் புல்வெளியில்

பனிமகள் துளிஎனத் தவழ்ந்து கொண்டிருந்தாள்...

 

குளிர்த்தென்றலும் அவ்வப்போது கேசம் கலைத்து சென்று கொண்டிருக்க...

அங்கே... நான் பார்த்த வண்ணக்கலவை

என் மனம் மயக்கும்

நீலம், வெள்ளையொடு... கொஞ்சம் பசுமையும் சேர்த்து...

 

ஆனால்... இத்தனையும் பக்கத் தாளங்களாய்த் தான்...

என் இதயம் லயித்ததோ...

அந்த உயிர்ச் சித்திரத்திடம்...

கண்கள் தாழிட்டிருக்க...

கரங்கள் குவித்திருக்க...

முழங்கால்கள் மடக்கி

அவள்... என் ஆண்டவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

 

அந்த ஆழமான மௌனத்தில் ...

அவளின் அதரங்கள் கூட அசைவு கொடுக்கவில்லை.

அசத்தும் அழகில்

அவள் ஒன்றும் இந்தியப் பெண்ணில்லை... (என்னைப் பொறுத்தவரை)

அன்பு வழிகின்ற அந்த மலர்முகம் சொன்னது...

அவள்... ஆங்கிலப் பெண் என்று...

அதுவும் அந்தக் கால ஆங்கிலப் பெண் என்று...

 

காத்திருந்தேன்... கண்ணிமைத்தல் கூட அனுமதிக்காமல்...

ஆம்... அதற்காகத் தானே காத்திருந்தேன்...

அழகாய் அவள் இமைகள் மெல்ல அசைந்து

அன்பாய் அவள் பார்வை... என்மீது லயித்ததென்றால்...

அவள் அதரங்களும் தவறவில்லை... எனைப் பார்த்து புன்னகைவீச...

 

எதிர்வினை எனையறியாமலே புறப்பட்டு, நானும்

புன்னகைக்க எத்தனித்தேன்...

எதிர்வரும் திகில் அருகிலமர்வதைக் கூட உணராமல்...

அவள் குரல் இன்னும் கேட்டுப் பழகவில்லை.

அதற்குள்...

அந்த நொடிப் பரிச்சயம் தந்ததோ,

ஆயிரம் யுகம் பழகின அனுபவத்தை...

 

ஆனால்,... அது நிமிடநேரமளவும் நீடிக்கவில்லை...

என்ன நடந்ததோ... எனக்கு நினைவிலும் இல்லை.

நின்றிருந்த இடம் நகர்ந்து கொள்ள,

45' க்கும் 90' க்குமிடையே,

செங்குத்தாய் ஒரு சரிவில்

உருண்டு கொண்டிருந்தோம்... இருவரும்...

 

கரடுமுரடாய் தரை... உடலை ரணமாக்க...

அந்தப் பாசக்கரம்...

அப்போதும் என்னை இறுகப் பற்றியிருந்தது...

கடைசியில்... வந்து சேர்ந்தோம்.

ஒரு பாதாள சிறையில்...

 

அவ்வளவு பெரிய அருவருப்பான அறையா!...

இந்த இரு சிறுபெண்களுக்கு...

போர்ச்சேவகர்கள் வேலேந்தி

முறைத்துக் கொண்டிருக்க...

பேசத் துணியவில்லை

இருமனங்களும்... இணைந்தே

தப்பிக்க வகைதேடிக் கொண்டிருந்தது...

 

மணிக்கணக்காய் நேரம் நீண்டுகொண்டிருக்க,

ஆஹா!... ஆண்டவன் கருணை கிடைத்து விட்டதோ!...

ஆம்... அரவமில்லா அந்த சந்தர்ப்பமும் வாய்த்தது...

எம் கண்கள் துழாவி கண்டு விட்டோம் வழியை...

 

மேல்தளம் ஒட்டி... செவ்வக வடிவில்...

கம்பிக் குறுக்கிட்டு...

காற்று வரவும்,... வெளிச்சம் வரவுமே,

ஓர் பெரிய விடுப்பு...

மண்மூட்டை மேடையிட்டு,

அதைத் தொடர்ந்து முன்னேறினோம்... சடுதியாய்...

 

எம் நான்கு கண்களும் எட்டினது...

அந்த ஓட்டையை...

என்னே ஆச்சர்யம்!...

எம் பிஞ்சுக் கரங்கள் வளைக்க...

அந்த இரும்புக் கம்பிகளும் வளைந்தது...

 

வெளிச்சம் தாக்குப் பிடித்து...

நிகழ்வுகள் காண

நிமிடநீட்சி தேவைப்பட்டது...

வெளியில் பார்த்தது... நிச்சயமாய் ஒரு நகரவீதி தான்...

பாதரட்சை அணிந்து எத்தனையோ

பாதங்கள் மட்டுமே தெளிவாய்த் தெரிய,

தப்பிக்கத் துணிந்து விட்டோம்...

 

சூழ்நிலை அனுமதித்தபடி...

ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே

வெளியேற முடியும் மற்றவர் உதவியொடு...

அவளை முதலில் வெளியேற்ற எண்ணி

அவள்முகம் பார்த்தேன்...

சம்மதிக்கவில்லை... அந்த பூமகள்...

வாக்குவாதமிட என் வாய் துணிந்தது...

வம்படியாய் எனைத் தள்ளிவிட

அவள்கரம் துணிந்தது...

எத்தனை தீர்க்கமானவள் அவள்...

சம்மதித்தேன் நானும்... நேரவிரயத்தைத் தவிர்க்க எண்ணி...

 

பாதிக் கிணறு தாண்டி விட்டேன்...

பாவி... பார்த்து விட்டான்

அந்த காவல்காரன்...

இருப்பினும், எம் இடம் அடைய

அரைநிமிடத் தூரமுண்டு... அவன் விரைந்தோடி வந்தான்எனினும்.

அரக்கன்... அதற்கும் துணிந்து விட்டான்...

 

தப்பி செல்லவும் மனமில்லை

என் தேவதையை விட்டுவிட்டு...

திகைத்து நின்றேன் சிலையாய்...

என் செய்வேன் நான்?...

அவளோ... என்னைவிட மேல்...

என்னை மட்டுமே நேசித்தவள்.

என்னுயிர் காக்கவே கடைசிவரை...

முடியவில்லை... அத்தருணம் விவரிக்க...

அவள்... என்னை முழுதாய் வெளியில் தள்ள..

அந்த அரக்கனின் கரம்

அவளை அழுந்தப் பற்றி..

கீழே தள்ள... மிகச் சரியாயிருந்தது...

 

அலறியடித்துத் துடித்துஎழுந்தேன்...

பெயர்கூடச் சொல்லவில்லையே... அந்த கல்நெஞ்சக்காரி...

கனத்த நெஞ்சத்துடன்

மிரண்டிருந்த என் கண்களுக்கு...

அப்போதுதான் அந்த உண்மை புரிந்தது...

நான் இருந்ததோ...

தென்பாண்டிச்சீமையில்... என் படுக்கைஅறையில்...

பனிமலையுமில்லை...

 பாதாளச் சிறையுமில்லை...

அத்தனையும் கனவு!....

அப்படியானால் அவள்?... என் தேவதைத் தோழி!...

என்ன ஆனாயடி?.... நீ...

எப்படியடி மறப்பேன்?... உன்னை...

என் கனவுக் கரம்

என் உயிர்தொட்டு தீட்டிய உன் சித்திரத்தை...

ஆயிரம் cindrella -களும், snowwhite -களும்

உன் ஒப்புமை கூட காணாரடி...

 

வருடங்களும் ஓடிவிட்டன... என் தேவதைத் தோழி...

எனைப் போல் நீயும் வளர்ந்திருப்பாயோ?...

எங்கேயடி சென்றாய்?...நீ..

 

உனக்காய் இன்றளவும் தூங்கிப் பார்க்கிறேன்...

என் கனவுலகில்,

உன் காலடிகள் கூட...

மறுபிரவேசம் செய்ய ஏனடி மறுக்கிறது?...

என் நனவு நோக்கியாவது பிரவேசிப்பாயா?...

என் கண்மணி!...

 

நீயென்ன சொல்வது?...

நிச்சயமாய் வருவேன்... உன் நாடு தேடி...

என் நட்பில் உன் அடையாளம் நாடி,

 

அன்றைக்கு வா... என் தோழி...

கரம் கோர்த்து... கனவு சுமந்து...

இருவர்மட்டுமே... உலாப் போகலாம்...

மீண்டுமாய்...

அந்த ஆல்ப்ஸ் மலை அடிவாரத்தில்...

1 comment: